அபாயகரமான வளைவுகளால் சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை
திருவாடானை, செப்.3:திருவாடானை பேருந்து நிலையம் வழியாக செல்லும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலும், திரெளபதி அம்மன் கோவில் அருகிலும் இரு அபாயகரமான வளைவுகள் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலை என்பதால், அடிக்கடி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த இரு அபாயகரமான வளைவுகளில் வரும்போது எதிரே வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் இந்த பிரதான சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் வரும்போது, ஒரு சில வாகன ஓட்டிகள் கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வந்து இந்த இரு இடங்களிலும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதனால் அப்பகுதியில் தினசரி பயணிக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் ஒருவித அச்சத்துடன் செல்வதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளிலும், சாலையின் நடுவே சிறிய சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமென அப்பகுதி வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: இந்த தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது எதிர் திசையில் வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு தாலுகா மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காவல் நிலையம் உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளது. மற்றொரு பகுதியில் தனியார் பள்ளி, தர்மர் கோவில் உள்ளிட்ட இடங்கள் உள்ளது.
இந்த இரு ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்களில் அடிக்கடி மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் எதிர் திசையில் வரும் வாகனங்களை கணிக்க முடியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் ஒருவித அச்சத்துடன் இந்த ஆபத்தான வளைவுகளை கடந்து செல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இரு ஆபத்தான வளைவுகளின் நடுவே சிறிய சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமெனக் கூறினர்.