திருக்குறளை மாணவர்கள் தினமும் படிக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு
ராமநாதபுரம், ஆக.3: நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். முதுகுளத்தூர் அருகே உலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிறை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து திறந்து வைத்தார். எம்.எல்.ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்பேத்கார் வரவேற்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் பேசும்போது கல்வி,சுகாதாரம் இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் என பேசியதன் மூலம் அவர் கல்வி துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என அறியலாம். நகராட்சி,நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகை, திட்டங்களும் குக்கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லம் தேடி கல்வி, கலை திருவிழா, வெளிநாடு கல்வி சுற்றுலா, அறிவுசார் வினாடி வினா உள்ளிட்ட சிறப்பாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற திட்டத்தின் முக்கய நோக்கம் பள்ளியில் சில பிள்ளைகள் நன்றாக படித்து நூறுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியும், சிலர் 60 மதிப்பெண் பெறலாம். சில ஜஸ்ட் பாஸ் கூட ஆகலாம். இதில் ஜஸ்ட் பாஸ் ஆகின்ற மாணவர்களின் தனித் திறமை 100 மதிப்பெண் பெறுகின்ற மாணவரிடம் இருக்காது. எனவே ஒவ்வொரு மாணவனுக்குள் இருக்கின்ற தனித்திறமையை கண்டறிந்து வெளிக்கொண்டுவருவது நம்முடைய கடமையாகும். திருவள்ளுவர்க்கு கன்னியாகுமரியில் 133 அடியில் சிலை, சென்னையில் வள்ளுவர்கோட்டம் அமைத்தும், திருக்குறளுக்கு எளிய உரை நடை எழுதினார் கலைஞர். தற்போது வெள்ளி விழா கொண்டாடப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ் இலங்கங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட நூல்களில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆகவே ஜம்பெரும் காப்பியங்களை விட திருக்குறள் மூத்த நூலாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த நூலை மாணவர்கள் மதிப்பெண்களுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காக நாள்தோறும் படிக்க வேண்டும்.
எனவே ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளும், அரசு தரும் நல்லதிட்டங்களை மாணவர்கள் விரல் பிடித்து முன்னேற வேண்டும். வருகின்ற வாய்ப்பினை விட்டுவிடாதீர்கள் என்றார். ஏற்பாடுகளை ரகுராம்,மருதுபாண்டி செய்திருந்தனர், ராமநாதபுரம் யூனியன் முன்னாள் சேர்மன் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.