தூய செங்கோல் மாதா திருவிழா
தொண்டி, ஆக.3: காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மூன்று சப்பரம் வீதி உலா நடைபெற்றது. தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருவிழா சப்பர பவனி நேற்று மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை ஆரோன், பங்குத்தந்தை ரெமிஜியஸ், முன்னாள் பங்கு தந்தையர் சுவாமிநாதன், அருள் ஜீவா, அருள் தந்தை ரெட்சனியதாஸ், அருள் தந்தை அமலதாஸ், அருள் தந்தை பிலிப் சேவியர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நற்கருணை பவனி அருள் தந்தை பாக்கியநாதன், பென்சிகர், செல்வகுமார், பாக்கியராஜ், அன்பு, கஸ்பார், அமல்ராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் வழி நடத்தினர். சப்பர பவனியில் முதல் தேர் புனித மிக்கேல் அதிதூதர், இரண்டாம் தேர் புனித செபஸ்தியார், மூன்றாம் தேர் புனித செங்கோல் மாதா சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் அருள் சகோதரிகள், அருட் சகோதரர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை பெருவிழா சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து தேர்ப்பவனியும், கொடி இறக்கமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.