ஏரியில் அதிகளவு மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்களின் முற்றுகை காரணமாக குவாரி மூடல்: பெரியபாளையம் அருகே பரபரப்பு
ஊத்துக்கோட்டை, ஜூலை 10: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததை கண்டித்து, கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் குவாரி மூடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக் காலத்தில் தண்ணீர் நிரம்பினால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த, ஏரியில் அரசு சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சவுடு மண் குவாரி விடப்பட்டது. இங்கிருந்து செல்லும் லாரிகளில் 6 வழிச்சாலை பணிக்காக சவுடு மண் ஏற்றிக்கொண்டு எடுத்துச்செல்கிறார்கள்.
இதையறிந்த கிராம மக்கள் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று அளவுக்கு அதிகமாக மண் எடுக்கிறீர்கள், இதனால் பெரிய அளவில் பள்ளம் ஏற்படுகிறது. மழை காலத்தில் இந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பும்போது நாங்கள் ஏரி பகுதிக்குச் சென்று ஆடு, மாடுகள் மேய்க்கும்போது பள்ளத்தில் விழுந்து உயிரிழக்க நேரிடும் எனக் கூறினர். இதை கேட்டதும் குவாரி நடத்துபவர்கள், நாங்கள் பள்ளத்தை சரி செய்து கொடுக்கிறோம் என்றனர். ஆனால் கிராம மக்கள், சம்பந்தபட்ட கனிம வளத்துத்துறை மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்ட பிறகு நீங்கள் மண் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த பெரியபாளையம் போலீசார், கிராம மக்களை சமரசம் செய்தனர். பின்னர், மண் குவாரியை மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.