மேல நான்காம் வீதியில் உள்ள உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர்
புதுக்கோட்டை, அக்.23: புதுக்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் உழவர் சந்தையில் தண்ணீர் தேங்கியதால் காய்கறிகளை வீணாகியதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த மழையால் புதுக்கோட்டை மேல நான்காம் வீதியில் உள்ள உழவர் சந்தையில் மழைநீர் சூழ்ந்ததால் அங்கு விலைப் பொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
மழைநீர் சூழ்ந்த போதிலும் சிலர் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்த நிலையில் அவர்களும் அந்த காய்கறிகளை அந்த பகுதியில் வைத்து விற்க முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை காரணமாக போதிய அளவு பொதுமக்களும் காய்கறிகளை வாங்க வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உழவர் சந்தை பகுதியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக உழவர் சந்தையில் சூழ்ந்த மழை நீரை மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.