கதிர் விட்ட சம்பா பயிர் முதலமைச்சரின் காலை, மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்
புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மாணாக்கர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்டு கல்வி பயிலும் வகையில், தமிழக அரசின் சார்பில் மாணாக்கர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இத்திட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணித்து ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், குறைகள் ஏதுமிருப்பின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்திடுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில், இத்திட்டங்கள் பள்ளிகளில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான காலை உணவுகளை சரியான நேரத்திற்குள் வழங்குவது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கூட்டம் நடைபெற்றது.
எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தினை மாணாக்கர்களிடம் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உரிய முறையில் கொண்டு சேர்த்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.