திருமயம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
திருமயம். அக்.31: திருமயம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சாத்தனி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னிருளு மகன் மகாதேவன் (35), காரைக்குடி தண்ணீர் பந்தல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காளையார் சேவுகன் மகன் கணேசன் (33) . இருவரும் நேற்று முன்தினம் காலை காரைக்குடியில் இருந்து திருச்சி - காரைக்குடி பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை கணேசன் ஓட்டி வந்துள்ளார். அப்போது திருமயம் பெல் கம்பெனியை அடுத்து குளத்துப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மகாதேவன், கணேசன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலத்த காயம் அடைந்த மகாதேவனை ஆம்புலன்ஸில் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
