கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
பொன்னமராவதி. அக்.24: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரப்பட்டி, வடக்கிபட்டி கிராமங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொன்னமராவதி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி, ஊனையூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் கடும் அவதியடைந்து வருகிறோம். இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 3 முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொன்னமராவதியில் இருந்து மேலத்தானியம்- அம்மாபட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு திருச்சி செல்லும் பஸ்களை சூரப்பட்டி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.