கறம்பக்குடி அனுமார் கோவில் குளம் தூர் வாரி சீரமைக்க வேண்டும்
கறம்பக்குடி, ஆக.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுமார் கோவில் எதிரில் குளம் உள்ளது. இந்த குளமானது பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தைச் சுற்றி முற்றிலும் செடி கொடிகள் படர்ந்து கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
இந்த புதர்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதனால், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளனர். எனவே, மாணவ மாணவிகளின் நலன் கருதி குளத்தில் புதர் மண்டி கிடைக்கும் செடிகளை அகற்றி சீரமைத்து தூர்வாரி சுற்றுச்சுவர் எழுப்பி பராமரிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.