மணமேல்குடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி
அறந்தாங்கி, நவ.18: மணமேல்குடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வட்டாச்சியர் அலுவலகம் செல்லும் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் சாலை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மணமேல்குடி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்தி இராமசாமி தலைமை தாங்கி தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மணமேல்குடி நகர திமுக செயலாளர் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி குமரேசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன்,கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.