அரிமளம் அருகே பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
திருமயம், செப்.18: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலம் செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து கானப்பூர், கே.செட்டிபட்டி, ஆனைவாரி வழியாக மேல்நிலைப்பட்டி வரை செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் கிராம சாலை உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட சாலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனரமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலையின் பராமரிப்பு காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் சாலை தொடர் பராமரிப்பு இல்லாமல் சாலையின் பெரும் பகுதி பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது.இதனால் சம்பந்தப்பட்ட சாலையை பயன்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் சேதம் அடைந்த சாலையால் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.