புதுக்கோட்டை முதல் ஆலவயல் வரை நகரப்பேருந்து இயக்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
பொன்னமராவதி, செப்.11: புதுக்கோட்டையில் இருந்து ஆலவயல் வரை நகரப்பேருந்து இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து அரசு நகரப்பேரூந்து நல்லூர், அரசமலை, காரையூர், சடையம்பட்டி வழியாக இடையாத்தூர் வரை வந்து செல்கின்றது. இந்த பேரூந்தினை குளவாய்பட்டி, புலவர்ணாகுடி, செம்மலாபட்டிவழியாக ஆலவயல் வரை இயக்கவேண்டும். மாவட்டத்தின் தலைநகரான புதுக்கோட்டைக்கு பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.
எனவே, புதுக்கோட்டையில் இருந்து ஆலவயலுக்கு நகரப்பேருந்து இயக்கவேண்டும். அவ்வாறு, பேருந்து இயக்கினால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என இப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் துவரங்குறிச்சியில் இருந்து நகரப்பட்டி வரை வந்து செல்லும் நகரப்பேரூந்தினை ஆலவயல் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.