வன உயிரின வார விழா விழிப்புணர்வு போட்டி
புதுக்கோட்டை, அக்.9: புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. மனித- வன உயிரினங்களுக்கு இடையேயான சகவாழ்வு என்ற தலைப்பில் இந்தப் போட்டி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர். கணேசலிங்கம் தலைமை வகித்தார். மன்னர் கல்லூரி முதல்வர் (பொ) ந. ஆதவன், விலங்கியல் துறைத் தலைவர். பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் மொத்தம் 16 பிரிவுகளாக நடத்தப்பட்டன. சுமார் 450 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று பரிசுகளைப் பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச் சரக அலுவலர் சதாசிவம் செய்திருந்தார்.