கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் சாய்வு பாதை அமைக்க வேண்டும்
கந்தர்வகோட்டை , நவ. 5: கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் சாய்வு பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.வட்டாச்சியர் அலுவலகம் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பணம் செலவு செய்து கட்டண ஆட்டோகளில் பொதுமக்களும் பணியாளர்களும் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தாசில்தார் அறை அலுவலகம் முதல் தளத்தில் இருப்பதாலும், தேர்தல் தாசில்தார் அலுவலகம் அதற்கு மேற்தளத்தில் இருப்பதாலும் பொது மக்களும்,பணியாளர்களும் படியில் ஏறி செல்ல சிரமம் அடைகிறார்கள். ஆகையால் இப்படியில் ஒருபுறம் சாய்வு பாதை அமைக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகளும் வயது முதிந்தவர்களும் கேட்டுக்கொள்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு செல்லும் பாதைக்கு சாய்வு பாதை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.