கந்தர்வகோட்டையில் சூரசம்கார திருவிழா கோலாகலம்
கந்தர்வகோட்டை, அக்.28: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடைபெற்றது.
ஐப்பசி மாத வளர்பிறையில் சஷ்டி பெருவிழா முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடுவர். அதில், முருகர் அறுபடைகளான பழனி, திருச்செந்தூர், திருத்தனி போன்ற கோயில்களிலும், மாநிலத்தின் பிற மாவட்டங்களிலுள்ள முருகர் கோயில்களிலும் கந்தர் சஷ்டி விழா கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. அதில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி வள்ளி, தெய்வயானை சமேத மருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விழா நடைபெற்று வந்தது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா திங்கட்கிழமை மாலை கோயில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் வீரவேல் என பக்தி பரவசமூட்டும் முழக்கங்கள் எழுப்பி முருகனை வழிபட்டுச் சென்றனர். இன்று மாலை 6 மணியளவில் முருகர் திருகல்யாணம் நடக்கிறது.