தேர்தல் அலுவலர் ஆய்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர்கால பாதுகாப்பு மையங்கள்,மீட்பு உபகரணங்கள் தயார் நிலை
புதுக்கோட்டை, நவ.27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர், கலெக்டர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழையின்போது மக்கள் பாதுகாப்பும், அவசர உதவித் திட்டங்களும், அரசு துறைகளுக்கிடையேயான சீரான ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக கலந்தாய்வு செய்யப்பட்டது. அதன்படி, மின்சார வாரியம் அனைத்து மின்கம்பங்களையும் ஆய்வு செய்து, பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் வேண்டும். மேலும், தேவையான அளவு புதியதாக மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் தயார்நிலையில் இருப்பு வைத்தல் வேண்டும். சீரான மின்சாரம் வழங்குதல், மின்கம்பி இணைப்புகளை உறுதி செய்தல் வேண்டும்.
பாதுகாப்பு மையங்கள் தயார்
ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, ஜெனரேட்டர் வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திடவேண்டும். தற்காலிக மற்றும் நிரந்தர பாதுகாப்பு மையங்களை கிருமிநாசினிகொண்டு தூய்மைப்படுத்துதல், கழிவறை வசதிகள் ஏற்படுத்தித்தருதல், தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றின் இருப்பினை உறுதி செய்திடவும், குளங்கள், ஊரணிகளில் ஏதேனும் உடைப்பு இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து, தேவையான அளவு மணல் மூட்டைகள் சாக்குப்பைகளை இருப்பில் வைத்து நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைக்க தயார்நிலையில் இருக்கவும்.
சீரான போக்குவரத்து
நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்கு கட்டைகள் ஆங்காங்கே இருப்பு வைத்தல் வேண்டும். சீரான போக்குவரத்தினை உறுதி செய்திடும் வகையில், சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மின் அறுப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருத்தல், சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் பட்டுப்போன மரங்களை கண்டறிந்து அவற்றினை அகற்ற நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்வளத்துறையினர் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அந்தந்த பகுதிகளுக்கான பொறுப்பு அலுவலரை நியமனம் செய்தும், மேற்படி பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள், தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மருத்துவ முகாம்
பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணி முகாம்களில் போதிய மருத்துவ முகாம்களுடன் கூடிய பரிசோதனை மேற்கொள்ளவும், பாதுகாப்பு வசதி, கூடுதல் கழிவறை வசதி மற்றும் இதர வசதிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு
வேளாண்மைத்துறையினர், கனமழையினால் ஏற்படும் சேத கணக்கெடுப்புப் பயிர் பணிகள் வருவாய் மற்றும் வேளாண்மை துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறையினர் படகு உரிமையாளர்கள் மற்றும் நீச்சல் தெரிந்த வீரர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருத்தல், மீனவர்களுக்கு தினசரி வானிலை அறிக்கை தெரியும் வண்ணம் விளம்பரப்படுத்துதல் வேண்டும். தினசரி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள், மீனவர்களின் விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் மற்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீண்டும் கரை திரும்பியதை உறுதி செய்திட வேண்டும். பேரிடரின் போது இரவில் செல்லும் படகில் பேட்டரி லைட்களை பயன்படுத்துவதை உறுதி செய்யவும், படகு இயக்கும் நபர்களை இரவு, பகல் என்று சுழற்சி முறையில் நியமனம் செய்ய வேண்டும். பேரிடர் சமயங்களில் எவ்வித தாமதமும் இல்லாமல் கரையோர மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், மீட்பு பணியில் ஈடுபடும் நபர்களின் விவரங்களை தெரிந்து வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை தயார்நிலை
தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.