கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் சம்பா நெல் காப்பீடு செய்ய அழைப்பு
கந்தர்வகோட்டை, நவ.26: கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் சம்பா நெல் காப்பீடு செய்ய வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள நெல் விவசாயிகள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் சம்பா நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 காப்பீட்டு கட்டணம் செலுத்தி பயிர்காப்பீடு செய்யலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.36000 கடன் தொகையில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.540 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 30 ந் தேதி ஆகும். இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1435ம் பசலிக்கான நெல் சம்பா சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத்தொகையுடன் தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ காப்பீடு செய்து அதற்குரிய இரசீதை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.