காவல் துறை சார்பில் புதுகையில் இரு சக்கர வாகன விழி்ப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை, அக்.26: புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சார்பில் இரு சக்கர வாகன விழி்ப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைகவசம் அனியாமல் சென்றால் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சார்பில் இரு சக்கர வாகன விழி்ப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்து நிலையம் பின்புறமுள்ள மாவட்ட ஆயுதப்படை திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, அண்ணா சிலை, கீழராஜவீதி, பழனியப்பா முக்கம், திலகர்திடல், பால்பண்ணை வழியாக மீண்டும் ஆயுதப்படை திடலில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற காவலர்கள் தலைக்கவசம் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.