விராலிமலையில் மழை பாதித்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
விராலிமலை, அக். 25: விராலிமலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்று நெடுஞ்சாலை துறை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் நெடுஞ்சாலை துறை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி தலைமையிலான குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள சிறிய பாலம், நீர் செல்லும் வழி த்தடம் உள்ளிட்டவைகளில் பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின் போது, புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன், விராலிமலை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ரதிகலா உள்ளிட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனிருந்தனர்.