பாச்சிக்கோட்டை ஊராட்சியில் அரசு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்துங்கள் பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, செப்.3: புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் அமைச்சர் மெய்யநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாச்சிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 15ம் தேதி அன்று சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அதன்படி, பாச்சிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விவரங்கள் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் 29 முகாம்களும், அறந்தாங்கி நகராட்சியில் 10 முகாம்களும், பொன்னமராவதி, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் அரிமளம் ஆகிய 8 பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு வீதம் 16 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 151 முகாம்களும், பெரிய நகரங்களில் 7 முகாம்களும் என மொத்தம் 213 முகாம்கள் வரும் 21.10.2025 வரை நடத்தப்பட உள்ளன. எனவே, தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மோகனசுந்தரம், ஆலங்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், திருவரங்குளம் பிடிஓ.க்கள் முத்துராமன், ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.