தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தா.பழூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களும் மழையில் நனைந்தபடி ஆனந்தமாக சென்றனர். இருப்பினும் இந்த மழையின் காரணமாக எள் அறுவடை விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது எள் அறுவடை பணி ஒரு சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், அதனை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். திடீரென பெய்த மழையின் காரணமாக எள்ளை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.