மகளிர் குழுக்களுக்கு ரூ.72.24 கோடி கடனுதவி வழங்கல்
சிவகங்கை, ஜூன் 12: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் 703 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புக்களைச் சார்ந்த 843உறுப்பினர்களுக்கு ரூ.72.24 கோடி மதிப்பீட்டிலான வங்கிக்கடன் இணைப்பு மற்றும் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது: பெண்களின் முன்னேற்றத்திற்கென கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக அரசு 1989ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு, மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்க தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக டாக்டர் கலைஞரின் தொலைநோக்கு பார்வையில், துவங்கப்பட்ட இத்திட்டமானது, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.