கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ விழா
கந்தர்வகோட்டை, ஏப்.11: கந்தர்வக்கோட்டை சிவன் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் அமைந்து உள்ள சங்கு ஊரணிக்கு வட புறமும் நஞ்சை நிலபரப்பின் தென்புறமும் அமைந்து உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு எண்ணெய் காப்பு செய்து ஆலய வாளகாத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி தண்ணீர் அபிஷேகமும், பசும் பால் அபிஷேகமும், பசும்தயிர் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம் திருமஞ்சன பொடி , இளநீர் வாழைப்பழம் , சாந்து குடி அபிஷேகமும், பலாப்பழ தேன், பஞ்சாமிர்தம் சந்தனம் திருநீறு , நல்லெண்ணெய் நெய் போன்ற 18 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாற்றி மலர்கள், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் குருக்கள் செய்திருந்தார்.