3 வீடுகளில் 4 சவரன் நகை, பணம் திருட்டு மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை
வந்தவாசி, ஜூலை 23: வந்தவாசி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 சவரன் நகை, ரூ.13 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரக்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவரது மனைவி சகுந்தலா(50). இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வெள்ளை இறந்துவிட்டதால் சகுந்தலா தனியாக வசித்து வருகிறார். சகுந்தலா நேற்றுமுன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்து கதவை உடைத்து பழைய ட்ரங்க்பெட்டியில் இருந்த 1 சவரன் நகை, முதியோர் உதவித்தொகை பணம் ரூ.1000ஐ திருடிச்சென்றுள்ளனர்.
அருகே உள்ள வெங்கடேசன், அவரது மனைவி பாஞ்சாலையும் வீட்டின் வெளியே திண்ணையில் படுத்திருந்தனர். இவர்களின் வீட்டு பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். அதே தெருவில் எதிர்வரிசையில் உள்ள ஏழுமலை(64) என்பவரின் வீட்டின் பின்பகக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், பெட்டியில் இருந்த 3 சவரன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவறை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் அதே தெருவில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள் மற்றொரு கதவின் தாழ்ப்பாளை கடப்பாறை மூலம் உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோர் கதவின் வழியாக பார்த்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் அரை டவுசர் அணிந்தபடி திருட முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதனால் 2 ஆசாமிகளும் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்ஐக்கள் பிரசாந்த், பிச்சைவேலு, ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது அது திருட்டு நடந்த வீடுகளில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் விஜயகுமார் வந்து தடயங்களை சேகரித்தார். தொடர்ந்து 3 பேரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.