அகரம்சீகூரில் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்
குன்னம், அக். 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள இறைச்சி கடைகளில் கோழி இறகுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்தப் பகுதியில் பன்றிகள் மேய்வதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வெள்ளாற்றின் தரைப்பாலம் வழியாக திட்டக்குடிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாணவிகள் துர்நாற்றம் வீசுவதால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும் இந்த பகுதி ஒரு திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. எனவே உடனடியாக ஆற்றின் கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தற்சமயம் மழைக்காலம் என்பதால் இந்தப் பகுதியில் நீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.