லோடு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி: 5 பேர் காயம்
பெரம்பலூர், ஆக.30: பெரம்பலூர் அருகே கூலித் தொழிலாளர்கள் பணிமுடிந்து லோடு வாகனத்தில் சென்றபோது, வாகனம் கவிழ்ந்து ஒருவர் இறந்தார், 5 பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை கிராமத்தில் வேலை செய்த கூலியாட்களை லோடு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தூத்துகுடியை சேர்ந்த மாதவன் (27) என்பவர் பெரம்பலூருக்கு சென்றார். அப்போது, ஆத்தூர்- பெரம்பலூர் சாலை சோமாண்டபுதூர் பிரிவு சாலை அருகில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்வார் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். ஓட்டுநர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தக்லால் சிங் திருச்சியை சேர்ந்த முத்துலெட்சுமி (49), சரசு( 67), பெரம்பலூர் அரவிந்த் 28 உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, அப்பகுதியினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவரின் சடலத்தை பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.