பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகாவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளம் ஆழப்படுத்தும் பணி: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரடி ஆய்வு
பெரம்பலூர்,அக்.24: பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுக்காவில் ரூ.20.03 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளத்தில் ஆழப்படுத்தில் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட தம்பை, குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை, கீழக் குடிக்காடு, சு.ஆடுதுறை, அகரம் சீகூர் ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரான லக்ஷ்மி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை குளத்தில் ரூ.20.03 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி அணை பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி, பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ குளத்தில் இறங்காமல் இருக்கும் வகையில் விளம்பர பதாகையினை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.