சம்பா நெல் வயலில் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
தா.பழூர், நவ. 22: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளான காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி, கோடாலி கருப்பூர், குறிச்சி, குடிகாடு, அடிக்காமலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டருக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
பொன்னாற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்ற நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, சம்பா சாகுபடி நடவு பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. சம்பா நடவு செய்யப்பட்ட நெல் நடவு வயல்களில் 15 நாட்கள் முதல் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் உரம் தெளிப்பதை தாமதம் செய்து வந்தனர். வானிலை ஆராய்ச்சி மையம் அவ்வப்போது வழங்கும் செய்திகளின் அடிப்படையில் தற்போது மழை வாய்ப்பு இருந்த போதும் மழை பெரிய அளவில் பொழியாமல் விட்டு விட்டு வெயில் அடிக்கும் காரணத்தால் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.