எம்ஆர்பி தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டதமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக நேற்று 20ம் தேதி வியாழக்கிழமை மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும்.
எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர் களுக்கு மகப்பேறு விடுப்பு தர வேண்டும். 11 மாதகால ஒப்பந்த பணி முறையை அறவே ஒலித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஆனந்த் கோரிக்கை விளக்கவுரை பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை பேசினர். முடிவில் கனிமொழி நன்றி தெரிவித்தார்.