வருகிற 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது- மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது வரப்பெற்ற புகார் மனுக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ம்தேதி திங்கட் கிழமை மாலை 4 மணி அளவில் பெரம்பலூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி, கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.