கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சர்வேயர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பெரம்பலூர், நவ.19: களப் பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வலியுறுத்தி நேற்று முதல் சர்வேயர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிடவேண்டும்.
புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிடவேண்டும், காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண் பாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நில அளவையர்கள் மாவட்டத் தலைவர் உமாச் சந்திரன் தலைமையில் 11 பெண்கள் உட்பட 26 பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நில அளவை மற்றும் பட்டா மாற்றம், பட்டா பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.