செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் ரூ.10.30 லட்சம் உண்டியல் காணிக்கை
பாடாலூர், செப் 19: செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் ரூ.10.30 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது.
கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள் 50 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 73 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் உண்டியலில் 3.500 கிராம் தங்கம், 235 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. இந்த தொகை கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடைசியாக ஜூன் மாதம் 27ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது.