வரகுபாடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாடாலூர், செப். 17: ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது தீர்வுகாணப்பட்டதற்கான சான்றுகளை ஆர்டிஓ அனிதா வழங்கினார். தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகளை, விரைவாகவும், அவர்களின் குடியிருப்பு அருகிலும் சென்று வழங்க, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி, கொட்டரை, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வரகுபாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு தாசில்தார் முத்துக்குமாரன் தலைமை வகித்தார்.
சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆர்டிஓ அனிதா கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டார்.
இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 497 மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை உரிமைத்தொகை பெறாத பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வழங்கி சென்றனர். அந்த மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படவுள்ளது. இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.