வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்
குன்னம், செப். 15: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயலப்பாடி ஊராட்சி வ. கீரனூர், வீரமநல்லூர் ஆகிய கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊரில் புகழ்பெற்ற வையக்கரை ஆண்டவர் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
வயலப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் செல்லவும், 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி செல்லவும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டும்.
வரும் மழைக் காலங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அருகில் உள்ள கடைகளில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து வயலப்பாடி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.