பெரம்பலூர் அருகே காட்டுப்பூனையை வேட்டையாடியவர் கைது
பாடாலூர், ஆக.15: பெரம்பலூர் அருகே காட்டுப்பூனையை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் உத்தரவின் படி, பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனவர் அருணாஸ்ரீ, வனக்காப்பாளர்கள் மணிகண்டன், அறிவுச்செல்வன், வனக்காவலர் மோகன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சிறுவாச்சூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சிறுகன்பூர்-கொளக்காநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை வனத்துறையினர் மடக்கி நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் இருந்த பையில் காப்புகாட்டில் வேட்டையாடிய காட்டுப் பூனை இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் வசந்த் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டுப் பூனை மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வசந்தை வனத்துறையினர் கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.