கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
பாடாலூர், அக. 9: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட எஸ்பி. ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அலமேலு(45). என்பவர் அதே பகுதியில் தான் நடத்தி வரும் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த 7 கிலோ 035 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அலமேலுவை மருவத்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து எஸ்எஸ்ஐ. ஜாபர் அலி வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.