பாரதிய இளங்கவிஞர் விருது மாநில போட்டிக்கு அரசு கல்லூரி மாணவர் தேர்வு
பெரம்பலூர், ஆக. 7: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் 2025 - 2026ம் ஆண்டின், பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வான இருவர் மாநில அளவிலான கவிதைப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 - 2026ம் ஆண்டின், பாரதி இளைஞர் விருதிற்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி கல்லூரிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவர் இளவரசன், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைஅறிவியல் கல்லூரியின் பி.சி.ஏ இரண்டாமாண்டு மாணவி கற்பக ரட்சாம்பிகை ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
அவர்களைக் கல்லூரி முதல்வர் சேகர், கணினி அறிவியல் துறைத் தலைவர் சகாயராஜ், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். அவர்கள் இருவரும் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள பாரதிய இளங் கவிஞர் விருதுக்கான கவிதை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவில் வெற்றி பெற்றால் விருதுடன் தலா ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.