செங்குணம் கிராமத்தில் புதிய கிரஷர் அமைக்க அனுமதி ரத்து
பெரம்பலூர், நவ.5: செங்குணம் கிராமத்தில் புதிய கிரஷர் அமைக்க கூடாது என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஆய்வுக்குப்பின் கலெக்டர் மிருணாளினி அனுமதியை ரத்து செய்தார். இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டம், கவுள் பாளையம் பகுதியில் இயங்கி வரும் பல்வேறு கிரஷர் மற்றும் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காற்று மற்றும் நீர் மாசு அடைந்த நிலையில், தற்போது செங்குணம் பகுதியில் விவசாய நிலத்தில் தனியார் ஒருவரின் கிரஷர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் கிரஷர் அமைக்க சம்மந்தப்பட்ட நபர்களால் பூமி பூஜை நடத்தப்பட்டது என்றும், அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் மிருணாளினியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, மாவட்டக் கலெக்டர் அவர்களின் உத்தரவின்படி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று செங்குணம் கிராமத்தில் புதிதாக கிரஷர் அமைக்க அளிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்ன பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.