வரகுபாடி கிராமத்தில் குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
பாடாலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 5 நாட்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை வரகுபாடி-சிறுகன்பூர் செல்லும் சாலையில் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக மற்ற அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா மற்றும் மருவத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து வரகுபாடி-சிறுகன்பூர் சாலையில் போக்குவரத்து சீரானது.