பெண்ணகோணம் - லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
குன்னம், நவ.1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெண்ணகோணம்- லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்ணகோணம் ஊராட்சியில் பெண்ணகோணம் மற்றும் கீழ குடிக்காடு ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.பெண்ணகோணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இந்த சாலை முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இந்த சாலையை தங்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும் வங்கி சேவைகளுக்கும் பல்வேறு சேவை மையங்களுக்கும் தினசரி நாளிதழ்கள் வாங்கவும் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த வருகின்றனர். இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பாக பெண்கள் பல இடங்களில் தடுமாறி விழும் அபாயம் ஏற்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் இருக்கின்றனர்.