குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடும் அவலம்
குன்னம், நவ.28: குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சியில் ரெட்டிக் குடிக்காடு தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் பராமரிக்காமல் முட்புதர்கள் நிறைந்து மழை நீரும் கழிவுநீரும் கலந்தோடி வீட்டிற்குள் புகுந்து வருவதால் கழிவு நீரோடு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் மழைக்காலம் என்பதால் இந்த பகுதியில் வாழும் பொது மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் தற்காலிக தீர்வாக கழிவுநீர் செல்லும் கால்வாயை சீரமைத்து, மழை நீரு்டன் கழிவு நீர் கலக்காமல் செல்ல வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.