ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி: தொழில் தொடங்க கடன் வழங்கல்
பெரம்பலூர், நவ.27: ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி தொழில் தொடங்க வங்கிக் கடன் அளிக்கப்படுவதாக மைய இயக்குனர் அறிவித்துள்ளார். ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிமையத்தின் மூலம், பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி பயிற்சி வருகிற டிச.10ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 30 நாட்கள் நடைபெற உள்ள இந்தப் பயிற்சி, தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5:30 மணிவரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் விலை இல்லாமல் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவுடன் வங்கிக் கடன் பெற்று, உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், 19வயது முதல் 50 வயதுக்குட்பட்டவராகவும், எழுதப் படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் வறுமைக்கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது (AAY) குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரிவேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பெரம்பலூர் ஐஓபி வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.