எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைவதால் லாரி சிறைபிடிப்பு
பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைந்து வருவதால் பொதுமக்கள் சிறைபிடித்த கிரஷர் லாரிகளை பேச்சு வார்த்தைக்குப் பிறகு விடுவித்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தின் தெற்கேயும் கல் குவாரிகளும், கிரஷர்களும் இயங்கி வருகின்றன. இதனால், கருங்கல், ஜல்லி, சிப்ஸ் மற்றும் எம்சாண்டுகளை ஏற்றிக் கொண்டு தினமும் ஊருக்குள் சென்று வரும் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களால் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
குண்டும், குழியுமாக கிடக்கும் இந்த சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர் தினமும் மிகுந்த சிரமமடைகின்றனர். இதனால், கிரஷர்களுக்குச் செல்லும் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் சாலைகளை சேதப்படுத்தாதிருக்க மாற்று வழித்தடங்களில் செல்ல வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் வாகன ஓட்டிகள் கேட்டபாடில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் என 5 பெண்கள் உள்பட 25 பேர், எசனை கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி அருகே தனியார் கிரஷர் லாரிகளை நேற்றுக் காலை 9:30 மணி அளவில் சிறைபிடித்தனர்.
இதனையறிந்து, கிரஷர் உரிமையாளரான அதே ஊரைச் சேர்ந்த பழனிமுத்து மகன் இளங்கோவன்(45) என்பவர் அங்கு விரைந்து வந்து, லாரிகளை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மேற்கண்ட பாதையில் இனி கிரஷர் லாரிகள் வராது, மாற்றுபாதை ஏற்பாடு செய்து கொள்கிறோம் என்று உறுதி கூறியதால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் சிறை பிடித்து வைத்திருந்த லாரிகளை விடுவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.