தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிய உணர்வு-மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 பேரணி
பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தையொட்டி \புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில், \”புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது.
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையைத் தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவ உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் பேரணியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் பெர்லினா, வட்டார இயக்க மேலாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.