பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.558.5 பிரீமிய தொகை: அக். 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செலுத்த வாய்ப்பு
அரியலூர் அக்.26: பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.558.5 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதி வரை செலுத்த வாய்ப்புள்ளதாக அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,அரியலூர் வட்டாரத்தில் நடப்பு 2025 ம் ஆண்டு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்.பயிர் காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்கள் முன்மொழிவு படிவம், (பொது சேவை மையத்திற்கு தேவையில்லை) விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் முதலியவற்றுடன் தங்கள் அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஆகியவற்றில் பயிர் காப்பீடு செய்யலாம்.
சிறப்பு பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.379.5 செலுத்த வேண்டும், இப்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 15ம் தேதியாகும்.பருத்தி பயிருக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.558.5 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதி ஆகும். ரபி பருவத்தில் நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ 577.5 செலுத்த வேண்டும் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 15 ம்தேதி ஆகும்.மேற்படி பயிர் காப்பீடு செய்வதனால் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளினால் உண்டாகும் இழப்பீடுகளை தவிர்த்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை அறிய அரியலூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தை விவசாயிகள் அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.