பெண் வயிற்றில் 5 1/2 கிலோ கட்டி அகற்றம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
பெரம்பலூர்,டிச.12: இளம் பெண் வயிற்றில் ஐந்தரை கிலோ கட்டி அகற்றி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர். பெரம்பலூரில், இளம்பெண் வயிற்றில் இருந்த 5 1/2 கிலோ கட்டியை அகற்றி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த 2-மாதங்களுக்கும் மேலாக வயிற்று வலி மற்றும் வயிறு உப்புசத்தால் அவதிப் பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சைபெற பெரம்பலூர் ரோவர் வளைவு அருகேயுள்ள லட்சுமி மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, லட்சுமி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் எஸ்.டி ஜெயலட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.கருணாகரன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் தினேஷ், நர்சுகள் ரம்யா, கிருஷ்ணா தேவி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்தரை கிலோ கட்டியை நேற்று அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு இளம்பெண் தற்போது நலமுடன் உள்ளார். டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு இளம் பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.