பெரியம்மா பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பாகங்கள் திருட்டால் வேளாண் பயிர்கள் பாதிப்பு
பெரம்பலூர், நவ.11: பெரியம்மா பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பாகங்கள் திருடுபோய்விட்டதால், மின்விநியோம் இல்லாமல் வேளாண்பயிர்கள் காய்ந்து வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று காலை, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பெரியம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் சாகுல் ஹமீது என்பவரது தலைமையில் திரண்டு வந்து அளித்த புகார் மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு: பெரியம்மா பாளையம் கிராமத்தில் EB டிரான்ஸ்பார்மரில் இருந்து 35 சர்வீஸ்களுக்கு மின் இணைப்பு பெற்று, சுமார் 150 ஏக்கர் நிலத்தில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு இந்த டிரான்ஸ்ஃபார்மரில் உள்ள காயில்கள், காப்பர் கம்பிகள் பீஸ் கேரியர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மர்ம நபர்களால் திருடு போய் விட்டன. இதனால், எங்கள் பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன.
இதுதொடர்பாக, பூலாம்படியிலுள்ள மின்சாரத் துறையினரிடம் தகவல் தெரிவித்தும், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மின்சாரத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதி மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து, வயல்களில் தண்ணீர் பாய்ச்ச துரித நடவடிக்கை எடுத்து, பயிர்களையும், எங்களையும் காப்பாற்ற வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.