பெரம்பலூரில் மேக வெடிப்பு போல் கருமேகங்களிலிருந்து கொட்டி தீர்த்த மழை
பெரம்பலூர், செப்.2: பெரம்பலூர் அருகே நேற்று மேக வெடிப்பு போல் கருமேகக் கூட்டத்திலிருந்து கொட்டித் தீர்த்த மழை.மாவட்டத்தில் இதுவரை 40 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 861 மில்லி மீட்டர் ஆகும். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய மாதங்களில் சராசரியாக 270 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை நேற்று வரை 175.91 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழைக்கு இன்னும் செப்டம்பர் மாதம் முழுமையாக உள்ள நிலையில் தென்மேற்குப் பருவமழை தனது 270 மில்லி மீட்டர் சராசரி அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வட கிழக்குப் பருவமழை பெய்யக் கூடிய மாதங்களாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 466 மில்லி மீட்டர் சராசரியாக பெய்யவேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆண்டு சராசரி மழை அளவாக 861மிமீ பெய்ய வேண்டிய பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம்தேதி வரை 343மிமீ மட்டுமே அதாவது 39.88 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மாலை நேரத்தில் பெரம்பலூர், மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி இரட்டைமலை சந்து, செஞ்சேரி, எளம்பலூர், ஆலம்பாடி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்
மழை பெய்தது. இதில் குறிப்பாக லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து நின்ற போதிலும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் மேக வெடிப்புபோல் மழை கொட்டித்தீர்த்தது. பகல் நேரம் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் கோடை வெப்பத்தைப் போல் அதிகரித்துவரும் நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழை வெப்பத்தின் தாக்கத்தை தனித்ததோடு, குளிர்ச்சியும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.