தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்- சங்கர் காலனி இணைப்பு சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி, ஜூலை 14:தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பிருந்து சங்கர் காலனி வரையிலான இணைப்புச்சாலையை நிறைவேற்றித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி 3வது மைல் முதல் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வரையிலான தமிழ்வழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, அதற்கு மாற்றாக கணேஷ்நகர் சந்திப்பில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி, காமராஜ்நகர் வழியாக சங்கர் காலனிவரை புதிய சாலை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் தற்போது கணேஷ்நகர் சந்திப்பில் இருந்து அரசு பாலிடெக்னிக் முன்பு வரை சாலை அமைத்துள்ளனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பிருந்து சங்கர் காலனி வரையிலான சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் அமைந்தால் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும் என்று காமராஜ்நகர், சங்கர்காலனி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.