மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு அமைதிக்கான விருது வழங்கல்
கோவை, ஜூலை 8: உலகளாவிய அளவில் மாதா அம்ருதானந்தமயி செய்து வரும் சமூக நலத்திட்டங்களை அங்கீகரித்து அவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அம்ருபுரியில் உள்ள மாதா அம்ருதானந்தமயி மடத்தில் நடந்த விழாவில், விவேகானந்தா சர்வதேச உறவுகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா மற்றும் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர் ஆகியோர் அம்மாவுக்கு அமைதிக்கான விருதை அளித்தனர். விழாவில், பேசிய விவேகானந்தா சர்வதேச உறவுகளின் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர், ”அம்மா உலகில் எங்கு சென்றாலும் அங்கு அமைதி நிலவுகிறது என்பது ஒரு உண்மை. தர்மத்தையும், சத்தியத்தையும் அடிப்படையாக கொண்ட இந்தியாவின் உன்னத தத்துவங்களை உலகிற்கு அம்மா பரப்ப முடியும்” என்றார்.
விழாவில், மாதா அம்ருதானந்தமயி தேவி பேசுகையில், ”இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டுள்ள சனாதன தர்மத்தை கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கற்பிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையின் செய்தியும் இதுவே. இயற்கையை அனைவருக்கும் பொதுவானது என்று கருதினால் உலகில் அமைத்தி நிலவும்” என்றார். இதில், விவேகானந்தா சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா, தர்பான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சாரிகா பன்ஹால்கர், ஸ்வநாத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரேயா பாரதியா, சக்ரா அறக்கட்டளையின் தலைவர் ஏ.ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.